லட்சம் லட்சமாகச் செலவழித்து விளம்பரம் செய்தபிறகும், ஆயிரம் பேர்கூடச் சேரவில்லையே என்று இணைய, மொபைல் அப்ளிகேஷன்கள் திணறும் நேரத்தில், ஒரு ரூபாய்கூட விளம்பரத்துக்காகச் செலவு செய்யாமல் நாற்பது கோடிப் பேரை ஈர்த்துள்ளது WhatsApp அப்ளிகேஷன்.
அதுமட்டுமில்லை, அடுத்த இரண்டு வருடங்களுக்குள் இந்த எண்ணிக்கை ஐம்பது கோடியாக உயரும் என்கிறார்கள். இத்தனைக்கும் காரணம், நிஜமான பயனுள்ள சேவைதான்!
’இதுவரை எந்த மொபைல் மெஸேஜிங் சேவையும் சாதிக்காத ஒன்றை நாங்கள் சாதித்துள்ளோம்’ என்கிறது WhatsApp, ‘நாற்பது கோடி உறுப்பினர்கள், அதில் பத்து கோடிப் பேர் நான்கே மாதங்களில்!’
WeChat, Line போன்ற போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது, WhatsAppன் வீச்சு மிக அதிகம். இது முற்றிலும் ஒருவர் மற்றவரிடம் சிபாரிசு செய்வதன்மூலமே (Word Of Mouth) பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது.
WhatsApp இலவசமாகவே கிடைக்கிறது, வெறும் ஐம்பது பேர் சேர்ந்து உருவாக்கியுள்ள, நிகழ்த்துகிற சேவை இது. ஐஃபோன், ஆண்ட்ராய்ட், விண்டோஸ் ஃபோன் என எல்லா ஸ்மார்ட்ஃபோன்களிலும் கிடைக்கிறது.
மொபைல் மெஸேஜிங் அப்ளிகேஷன்களின் வெற்றிக்குக் காரணம். அவை, SMS செலவை முற்றிலும் பூஜ்ஜியமாக்குவதுதான். இலவசம் என்றால் நம் மக்கள் விடுவார்களா? அள்ளிக்கொண்டுவிட்டார்கள்!
இதனால், பல நிறுவனங்கள் இந்தப் போட்டியில் குதித்தன. அவற்றின் நடுவே வெற்றிகரமாக முன்னேறியுள்ளது WhatsApp.
இனிவரும் நாள்களில் WhatsAppக்குப் புதிய உறுப்பினர்களாக இன்னும் பல கோடிப் பேர் சேரவுள்ளார்கள். அதையெல்லாம் வைத்து இவர்களும் மற்ற நிறுவனங்களும் எப்படிப் பணம் பண்ணப்போகிறார்கள் என்பதுதான் அடுத்த முக்கியமான சவால்!