ஓங்கி அடிச்சா “5G” வேகம்டா!

grey ஓங்கி அடிச்சா 5G வேகம்டா!   
உலகளவில் இணைய வேகத்தில் தாறுமாறாக இருப்பது தென் கொரியா தான். அண்ணன் அமெரிக்கா உலகிற்கே ராசாவாக இருந்தாலும், இணையத்தில் சிப்பாய் அளவில் தான் தென் கொரியாவிடம் இருக்கிறார். என்ன முக்கினாலும் தென் கொரியாவில் ராணுவத்தைத் தான் மிரட்டிக் கொண்டு இருக்க முடிகிறதே தவிர, இணைய வேகத்தை பிடிக்க முடியவில்லை. 
 
உலகளவில் இணையத்தில் தென் கொரியா தான் அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறது. இந்தியா குறைந்தது 15 – 20 ஆண்டுகளாவது பின் தங்கி இருக்கும் என்றால், கற்பனை செய்து கொள்ளுங்கள். எங்கள் நிறுவனத்தில் ஒரு ப்ராஜக்ட்க்காக தென் கொரியாவில் 10 வருடங்களுக்கு முன் ஒரு வங்கிக்காக பணி புரிந்தார்கள், அப்போதே அங்கே இணைய வேகம் 100 MB இருந்தது என்று கூறுவார்கள். நம்ம ஊரில் தற்போது தான் 25 MB வந்து இருக்கிறது. 100 MB கொடுக்கிறார்கள் ஆனால், அதிக கட்டணத்தால் வெகுஜன பயன்பாட்டிற்கு இன்னும் வரவில்லை.
தென் கொரியா தற்போது மொபைல் இணையத்தில் 5G வேகத்தைக் கொண்டு வர முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள். 
1.6 ட்ரில்லியன் பணம் இதற்காக ஒதுக்கி இருக்கிறார்கள். 4G LTE வேகமே செமையாக இருக்கும் இதில் 5G வந்தால்…! 5G வேகம் 4G LTE ஐ விட 1000 மடங்கு அதிகமாக இருக்கப் போவதாக கூறுகிறார்கள். என்னது 1000 மடங்கா!!! எப்படி இருக்கும் பாருங்க. இவர்களின் கணிப்புப் படி 800 MB திரைப்படம் தரவிறக்கம் [Download] ஆக ஒரு நொடி தான் ஆகுமாம்! (தப்பா சொல்லல நிசமாத் தான்) 
சிங்கப்பூரில் 4G LTE இருக்கிறது. இதுவே வேகமாக இருக்கும் ஆனால், இங்கே அனைவரும் இணையத்தை அதிகம் பயன்படுத்துவதால் Peak நேரங்களில் மெதுவாகத் தான் இருக்கும்.
இதில் 5G சோதனை அடிப்படையில் 2017 லிலும் அனைவரின் பயன்பாட்டிற்கு 2020 லும் வரும் என்று கூறி இருக்கிறார்கள். ஏன் இவ்வளவு காலம் எடுக்கிறது என்று புரியவில்லை. இதற்கு முன்பு வேகமாக வந்தவர்கள், 5G க்கு ஏன் இவ்வளவு காலம் எடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. என்னைப் பொருத்தவரை இவர்கள் திட்டமிட்ட காலத்திற்கு முன்பே 5G தொழில்நுட்பம் வந்து விடும் என்று நினைக்கிறேன்.
3G சேவை பயன்படுத்தினால் சிங்கப்பூரில் 12 GB Data இலவசமாக கொடுத்த தொலைபேசி நிறுவனங்கள் 4G வந்த பிறகு 3 GB தான் கொடுக்கிறார்கள். காரணம், 4G வேகமாக இருப்பதால், வழக்கமாக இணையத்தை பயன்படுத்துவதை விட அதிகம் பயன்படுத்துவோம். உதாரணத்திற்கு இணையத்தில் நீங்கள் பார்க்கும் திரைப்படம் Buffer ஆகாமல் வந்தால் இரண்டு படம் கூட பார்ப்பீர்கள் ஆனால், அதே முக்கிக் கொண்டு இருந்தால், பாதிலேயே நிறுத்தி விடுவீர்கள். தற்போது புரிகிறதா ஏன் குறைவான வேகத்திற்கு அதிக GB யும் அதிகமான வேகத்திற்கு குறைவான GB யும் இலவசமாகக் கொடுக்கிறார்கள் என்று. முன்பு 12 GB இருந்தாலும் அதில் நான் 1.5 GB தான் பயன்படுத்தி இருப்பேன். 4G வந்த பிறகு 3 GB கூட போதவில்லை.
5G வந்து இணையம் செலவு குறைவாக மாறினால் எதிர்காலத்தில் Wifi Router ஒவ்வொருவரும் வாங்குவார்களா என்றே சந்தேகமாக இருக்கிறது!