உலகின் மிகவும் ஆடம்பர கப்பலாக வர்ணிக்கப்படும் டைட்டானிக் இப்போதுள்ள எந்தவொரு நவீன தொழில்நுட்ப வசதிகள் இல்லாத காலத்தில் மிகவும் பிரம்மாண்டமாகவும், ஏராளமான வசதிகள் கொண்டதாகவும் கட்டப்பட்டது. இங்கிலாந்தில் இருந்து அமெரிக்காவுக்கு சென்றபோது தனது கன்னிப் பயணத்திலேயே அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்த பனிப்பாறையில் மோதி கடலுக்குள் மூழ்கியது.
கடல் ராணி என்றழைக்கப்பட்ட டைட்டானிக் கப்பல் 3,547 பேர் பயணம் செய்யும் வசதி கொண்டது. முதல் பயணத்திலேயே விபத்தை சந்தித்த அந்த கப்பலில் பணியாளர்கள், பயணிகள் உள்பட மொத்தம் 2,223 பேர் பயணித்தனர். உயிர்காக்கும் படகுகள் மூலம் 706 பேர் வரை மட்டுமே உயிர் தப்பினர். மீதமுள்ள 1,517 பேர் கடல் மூழ்கி பலியாகினர். கடல் நீரின் வெப்பநிலை மைனஸ் 2 டிகிரிக்கும் குறைவாக இருந்ததே பலர் உயிரிழக்க காரணமாக கூறப்படுகிறது.
டைட்டானிக் கப்பலில்தான் முதன்முறையாக தொலைபேசி வசதியுடன், மின் விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன.

டைட்டானிக் கப்பலின் நீராவி எஞ்சின்களை இயக்குவதற்கு ஒரு நாளைக்கு 800 டன் நிலக்கரி தேவைப்பட்டது.
புகைப்போக்கி குழாயின் உயரத்தை சேர்த்து அளவிடும்போது டைட்டானிக் கப்பல் 17 அடுக்குகள் கொண்ட கட்டிடத்திற்கு இணையாக இருந்தது.
மூன்று கால்பந்து மைதானத்திற்கு இணையான நீளத்தை கொண்டது டைட்டானிக்.

மணிக்கு 23 நாட்டிக்கல் மைல் வேகம், அதாவது மணிக்கு 43 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டது. விபத்துக்குள்ளானபோதும், அதிகபட்ச வேகத்தில் சென்றதாலேயே பனிப்பாறைகள் இருப்பது தெரிந்தும் கப்பலை நிறுத்த இயலவில்லை என்று கூறப்படுகிறது.

டைட்டானிக் கப்பலில் 4 லிஃப்ட்டுகள், தண்ணீரை வெப்பமூட்டும் வசதி கொண்ட நீச்சல் குளம், உடற்பயிற்சி மையம், 2 நூலகங்கள் மற்றும் 2 முடிதிருத்தும் நிலையங்கள் இருந்தன.

நாள் ஒன்றுக்கு பயணிகள் மற்றும் பணியாளர்களுக்கு 53,000 லிட்டர் குடிநீர் தேவைப்பட்டது.
டைட்டானிக் கப்பலில் 4 புகைப்போக்கி குழாய்கள் பொருத்தப்பட்டிருந்தன. அதில், மூன்று மட்டுமே புகை வெளியேற்றுவதற்கானது. மீதமுள்ள ஒன்று அழகுக்காக பொருத்தப்பட்ட டம்மி புகைப்போக்கி குழாய்.
டைட்டானிக் கப்பலில் மூன்று வகுப்புகள் கொண்டது. அதில், முதல் வகுப்பில் பயணம் செய்வதற்கான டிக்கெட் கட்டணத்தை இப்போதைய மதிப்புக்கு ஒப்பிட்டால் 99,000 டாலர் ஆகும். இந்திய மதிப்பில் 50 லட்சத்துக்கும் அதிகம்.

நாள் ஒன்றுக்கு 86,000 பவுண்ட் இறைச்சி, 40,000 முட்டைகள், 40 டன் உருளைக் கிழங்கு, 7,000 முட்டைகோஸ்கள், 3,500 பவுண்ட் வெங்காயம், 36,000 ஆப்பிள்கள் மற்றும் 1,000 பிரெட் பாக்கெட்டுகள் ஆகியவை பயணிகள் மற்றும் பணியாளர்களுக்கு உணவுப் பொருட்களாக தேவைப்பட்டது.