புதிய ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் பெயர் மார்ஷ்மல்லோ: கூகுள் அறிவிப்பு


சான் பிரான்ஸிஸ்கோ: புதிய ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் பெயர் மார்ஷ்மல்லோ என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. 
உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன்களில் அதிக ஆதிக்கம் செலுத்தி வரும் கூகுளின் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இதுவரை ஐஸ்கிரீம் சான்ட்விச் (4.0), ஜெல்லி பீன் (4.1 - 4.3), கிட்கேட் (4.4), லாலிபப் (5.0 - 5.1),  ஆகிய பதிப்புகள் அதிக வரவேற்பை பெற்றிருந்தன. இந்த நிறுவனம் இனிப்பு வகைகளாகப் பெயரிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

அந்த வரிசையில் அடுத்ததாக பல புதிய நவீன வசதிகளுடன் வெளிவரும் புதிய பதிப்பிற்கு மார்ஷ்மல்லோ என பெயரிட்டுள்ளது கூகுள். 
இந்த புதிய இயங்குதளத்திற்கு லஸ்ஸி, நிலவு பை, உள்ளிட்ட பல பெயர்கள் பரிசீலனையில் இருந்து வந்தன. இந்நிலையில் நேற்று ஆண்ட்ராய்டு பொறியியல் துறை துணைத் தலைவர் டேவ் பர்க் தனது டுவிட்டர் பக்கத்தில் மார்ஷ்மெல்லோ என்ற பெயரையும் புகைப்படத்தையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 

உலகம் முழுவதும் 80 சதவீத ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்டு இயங்குதளம் உள்ளது.