லிங்கா, ஐ, என்னை அறிந்தால் தமிழ் சினிமாவின் அடுத்த மூவ்..!

News

தமிழ் சினிமா அடுத்த இரண்டு மாதங்களில் இதுவரை பார்த்திருக்காத ஒரு வசூலைப் பெறப் போவதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்தடுத்து மிக முக்கியமான மூன்று திரைப்படங்கள் வெளிவரப் போவதே அதற்குக் காரணம். இதற்கு முன்னர், இப்படிப்பட்ட படங்கள் வந்திருக்க வாய்ப்பிருந்தாலும், அப்போதிருந்த சூழ்நிலையில் கிடைத்த வசூலை விட தற்போது கிடைக்கப்போகும் வசூல் நிச்சயம் சாதனைக்குரியதாகவே இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அடுத்த மாதம் டிசம்பர் 12ம் தேதி, ரஜினிகாந்த், சோனாக்ஷிசின்ஹா, அனுஷ்கா நடிக்க 'லிங்கா' படம் வெளிவர உள்ளது. அதன்பின், ஜனவரி 2015ல் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் நடித்துள்ள 'ஐ' படமும், அஜித்குமார், அனுஷ்கா, த்ரிஷா நடிப்பில், கௌதம்மேனன் இயக்கியுள்ள 'என்னைஅறிந்தால்' படமும் வெளியாக உள்ளது. இந்தப்படங்களின் செலவு சுமாராக 300 கோடி ரூபாய் அளவில் இருந்திருக்க வாய்ப்புள்ளது. இந்த மூன்று படங்களும் வசூலிக்கும் தொகைதான், தமிழ் சினிமாவை, அடுத்த வியாபார கட்டத்திற்குக் கொண்டு செல்லும் என்று வினியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை வைத்துள்ளனர்.
தீபாவளிக்கு வெளிவந்த 'கத்தி' படமே 100 கோடி ரூபாய் வசூலைப் பெற்றதென்றால், இந்தப் படங்கள் அதையும் தாண்டி வசூலைப் பெற வாய்ப்புள்ளதாகவே கருதுகிறார்கள். ரஜினி படத்திற்கென்று, தனி வசூல் இருந்தாலும், ஒரு வாரம் கழித்து, கிறிஸ்துமஸ் விடுமுறை வருவதால் அது அந்தப்படத்திற்கு, மேலும் பலனைக் கொடுக்கும். பொங்கலுக்கு எப்படியும் ஒரு வாரம் வரை விடுமுறை இருக்கும்பட்சத்தில், பல ஊர்களில், தினமும் ஐந்துகாட்சிகள் நடைபெற வாய்ப்புள்ளது. எனவே, எப்படியும் இந்த மூன்று படங்கள் மூலம் சுமார் 500 கோடி ரூபாய் வரை வசூல் நடந்துவிட வாய்ப்புள்ளது என்றே பலரும் கருதுகிறார்கள்...